என் எழுத்து

சனி, 23 ஜனவரி, 2021

நடேச முத்து

                                 "பக்தி"

விலைகொடுத்துக் கொள்வாருமுளரோ நடேசா

இலவசத்துக் கொள்வாரே இலரெனும் போது.

புதன், 30 அக்டோபர், 2019


பிறவி உண்டா..? கிடையாதா..?

மனிதனைத் துரத்தும் மாபெரும கேள்விகள்.

விழிப்பிலும் கனவிலும ஏராளமான பிறவிகள் கழிந்தபின்னும்...

இன்னும் தொடரும் மரண மர்மம்..

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

டெவலப்மெண்ட்

டெவலப்மெண்ட்ன் பெயரால்
எங்கள் சாலைகள் அகலமாயின.

டெவலப்மெண்ட்ன் பெயரால்
எங்கள் சாலைகளில் வாகனங்கள்
தலைதெறிக்க ஓடின..

டெவலப்மெண்ட்ன் பெயரால்
எங்கள் ஆநிரைகள் கசாப்புக் கடைகளில்
நின்றன.

டெவலப்மெண்ட்ன் பெயரால்
நாங்கள் வீடுகளை இழந்தோம்.

டெவலப்மெண்ட் எங்கள் நிலங்களைக்
கபளீகரம் செய்தது.

உண்மையில் டெவலப்மெண்ட் எங்களுக்குத்
தந்த டெவலப்மெண்ட்தான் என்ன?

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மிட்டாதார்

'மிட்டாதார் தெரு '

அழிந்து போன பெயிண்ட்டாக இருந்தாலும், இன்னும் தெருப்பெயரைத் தெளிவாகப் படிக்க முடிந்தது. எங்கள் வீட்டுச் சாமான்களைச் சுமந்தபடி, ஒற்றை மாடு பூட்டிய வில் வண்டி அந்தத் தெருவுக்குள் நுழைந்தது. அது எங்கள் ஊரின் கடைசியில் இருந்த தெரு. அந்தத் தெருவின் அனைத்து வீடுகளின் பின்புறமும் நீளமாக ஒரே நேர்க்கோடாக ஓனி என்று மக்களால் அழைக்கப்பட்ட சாக்கடை ஓடை ஓடியது. சாக்கடையைத் தாண்டினால் புன்செய் நிலங்கள். வருடத்தின் சில மாதங்கள் விவசாயம் செய்யப்பட்டு சோலைகளாகவும், எஞ்சிய மாதங்களில் பலமாகக் காற்று வீசும் பொட்டல் வெளிகளாகவும் இருந்தன.

நாங்கள் முதலில் மேட்டுத் தெருவில்தான் குடியிருந்தோம். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் அவசரத் தேவைக்காக வீட்டைக் காலி செய்யச் சொன்னதால், அந்தத் தெருவில் வீடு எதுவும் காலியாக இல்லாததால், இந்தத் தெருவுக்கு வரவேண்டியதாயிற்று. வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. ஒவ்வொரு சாமானாக எடுத்துக் கொண்டுபோய் உள்ளே வைத்தோம். அன்று மாலைவரை ஒவ்வொரு சாமானாக அனைவரும் தேடித் தேடி எடுத்து அதனதன் இடத்தில் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மாலையில் ஒரு வழியாக வீடு ஒழுங்கானதும் கயிறு, வாளியோடு பொடக்காலியில் போய், கிணற்றிலிருந்து நீர் இறைத்து, கை கால் முகம் கழுவி, தலைக்கு எண்ணெய் தடவி, விசிலடித்தபடி கண்ணாடி பார்த்துத் தலைசீவிப் பெளடர் அடித்து ஷோக்காக வெளியே கிளம்பினேன். வீட்டை விட்டு வெளியே வந்த போது பக்கத்து வீட்டு அன்வர் எதிர்ப்பட்டான். அன்வர் என் பள்ளித்தோழன். அவனுக்கு நாங்கள் வரப்போவது தெரியாது.

'டேய் ரவி பக்கத்து ஊட்டுக்கு நீங்கதான் வந்திருக்கிறீங்களா ?.. '

'ஆமாண்டா ஒனக்குத் தெரியாதா ? '

'யாரோ வரப்போறாங்கன்னு முனவர் ச்சிச்சா சொன்னாரு ஆனால் நீதான்வரப்போறன்னு தெரியாது. '

வீட்டுக்குள்ளே இழுத்துக் கொண்டு போனான்.

'அம்மி கோன் ஆயா ஹை ரத்தி தேக்.. ' அம்மா யார் வந்திருக்காங்கன்னு பாரு.

'ரவி வாப்பா. நல்லா கீறயா ? பக்கத்து ஊட்ல நீங்கதான் வொந்தி க்கீறதா ? இரு கண்ணு டா சாப்ட்டு போவியான். '

'அன்வர் பைட்னக்கொ போல்ரே அபி ஆத்தியெளன். ' அன்வர் அவனை உட்காரச்சொல்லு. இதோ வரேன்.

இருவரும் தோள்மேல் கை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அது நீளமான தெரு. இரண்டு கிளைச் சந்துகளோடு சுமார் ஐநூறு குடும்பங்கள் வசித்து வந்தன. முழுக்க முழுக்க உருது பேசும் முஸ்லீம் இனத்தவர் மட்டுமே வசிக்கும் தெரு.

'அன்வர், எங்கம்மா தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னாங்க. '

'அப்படியா, நிறைய காய்கறி வாங்கணுன்னா சந்தைப் பக்கமாப் போலாம். வெறுந் தக்காளிதானே ? இங்க பக்கத்துல மிட்டாதார் கடையிலயே
வாங்கிக்கலாம். '

'மிட்டாதார் கடையா ? '

'ஆமாண்டா. மிட்டாதார் கடைதான். '

ஏற்கெனவே மிட்டாதார் தெரு என்ற பெயரினால் எனக்கு உண்டான குழப்பமே இன்னும் தீரவில்லை. முதலில் மிட்டாய்க்காரத் தெருவோ ? என்று நினைத்தேன். ஆனால் தெளிவாக எழுதியிருந்தது. மிட்டாதார் கடை என்று கேள்விப்பட்டதும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அந்தக் கடை ஒரு வீட்டின் இடிபாட்டின் முன்புறம் அமைந்திருந்தது. இடிந்து போன செங்கல் மற்றும் காரையின் மீது மெத்தி, இரண்டு மூன்று பலகைக் கல் பாவி, அதன் மீது மூன்று நான்கு சாக்குப் பைகள் போட்டு, தண்ணீர் தெளித்து ஈரமாக்கி, அதன் மேல் சிறிதும் பெரிதுமாக நான்கைந்து கூறுகள் தக்காளியும், அதே போன்று நான்கைந்து கூறுகள் கத்தரிக்காயும் வைக்கப் பட்டிருந்தது. அருகே ஒரு கல்லின் மேல் கிழவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அன்வர் சொன்னான்.
'இந்தக் கூறு நாலணா. இது எட்டணா. எது வேணும் ? '

நான் ஒரு நாலணா நாணயத்தை அவனிடம் நீட்ட, அவன்,

'நானா, நாலணா அலியெள. '

அவர் கையில் நாலணாவைத் திணிக்க, அதை வாங்கிச் சாக்குக்கு அடியில் போட்டுக் கொண்ட அவர் சட்டை போடாமல் லுங்கி மட்டும் அணிந்து அமர்ந்திருந்தார். வாயில் சின்ன மன்னான் பீடி புகைந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாக இருப்பார் போலத் தோன்றியது. மூக்கு கொஞ்சம் நீண்டு வளைந்திருந்தது. நான் விரும்பிப் படிக்கும் லயன் காமிக்ஸின் லக்கி லூக் நகைச்சுவைக் கதைகளில் வரும் கிழவரை ஒத்திருந்தார். எங்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நாங்கள் இருவரும் ஒரு கூறு தக்காளியை ஒரு கைக்கு மூன்று நான்காக எங்கள் இரு கைகளிலும் அள்ளிக் கொண்டு கிளம்பினோம். என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

'டேய் அன்வர், இதுதான் மிட்டாதார் கடையா ?... '

'ஆமா.. ' அவன் வாய் பப்பர மிட்டாயைச் சப்பிக் கொண்டிருந்தது.

எதிர்த்த வீட்டின் நீண்ட திண்ணையில் அமர்ந்து கொண்டோம். என்னிடம் கேள்விகள் நிறைய இருந்தன.

'அப்ப, கடையில இருந்த அந்த தாத்தா யாரு ?.. '

'அவருதான் மிட்டாதார். '

'அப்ப அவரு பேரயா இந்த தெருவுக்கு வெச்சிருக்காங்க ?... '

'ஆமா ரவி. இவரு சாதாரண ஆளு இல்லை. ஒருகாலத்துல பெரிய மிட்டாதாரா இருந்தவரு. '

'மிட்டாதார்ன்னா ? '

'மிட்டாதார்ன்னா.. பெரிய பணக்காரரு. இந்த ஜமீந்தார் எல்லாம் இருக்காங்கல்ல, அந்த மாதிரி. அந்த காலத்துல இந்தத் தெருலயே அவரு
வீடுதான் பெரிய வீடு. அவர் வீட்ல மூட்டை மூட்டையா வெள்ளிக் காசு வெச்சிருந்தாருன்னு சொல்லுவாங்க. அதுக்கப்புறம் ஏளையாயிட்டாரு. '

தக்காளியோடு மெளனமாக வீடு நோக்கி நகர்ந்தோம்.

அன்றிரவு 'அங்கன் ' என்று உருதுவில் அழைக்கப்படும் வீட்டின் பின்புறம் இருந்த வெட்டவெளியில் மல்லாந்து படுத்தபடி சாவகாசமாக வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பத்துபேர் ஓடிப்பிடித்து விளையாட வசதியான நல்ல நீள அகலமுடைய அங்கன் அது. கெட்டியாகக் கரைக்கப்பட்ட சாணியிட்டு மெழுகப்பட்டிருந்த அந்த மண் தரை காரை பூசிய தளம் போல உறுதியாக இருந்தது. பக்கத்து வீட்டு தாஹிரா பானு என் அருகே வந்து அமர்ந்தாள்.

'டேய் ரவி மேல பாத்தியா ?.. '

'ஆங்.. நெறய நட்சத்திரம் இருக்கு. '

'அந்த நட்சத்திரம்லாம் எப்படி வந்துச்சு தெரியுமா ?.. '

'எப்படி வந்துச்சு ?.. '

'பெரிய பெரிய பணக்காரங்கல்லாம் செத்துப் போய்ட்ட பின்னாடி அல்லா கிட்ட போவாங்கல்ல.. '

'ஆமாம். '

'அப்ப அவங்கள்ல பெரிய பணக்காரங்கள எல்லாம் அல்லா நட்சத்திரமா ஆக்கிருவாராம்.. '

'அப்புடியா ?.. '

'ஆமாம். அதோ அந்த நட்சத்திரம் எல்லாத்தையும் விட பெரிசா இருக்குல்ல. '

'ஆமாம். '

'அதுதான் ரொம்பப் பணக்காரரா இருந்தவரு. அத வுட கொஞ்சம் சின்னதா ஒரு நட்சத்திரம் இருக்குல்ல. '

'ஆமாம். '

'அவரு கொஞ்சம் கம்மி பணக்காரரு. '

என் மனதுக்குள் கேள்வி எழுந்தது.

'மிட்டாதார் நட்சத்திரமாவாரா ?... '

சில நாட்களில் தேன்கனிக்கோட்டை உரூஸ் சந்தனக்கூடு விழா வந்தது. பெரியவர்கள் தாரை தப்பட்டை முழங்க புலி வேஷம் கட்டி ஆடினார்கள். சிலம்பம், பந்தம் சுற்றுதல், சுருள் கத்தி சுற்றுதல் என உற்சாகமாகக் கண்டு களிக்கும்படி இருந்தது. சூஃபிகள் தப்படித்துப் பாடிவந்தார்கள். பெரியவர்களின் பெரிய சந்தனக் கூடு யானையில் செல்ல, அதனைப் பின்தொடர்ந்து இளையவர்களின் சிறிய சந்தனக் கூடு குதிரையில் வந்தது.அந்த ஒரு வாரமும் நான் அன்வரிடம் சத்தமாக விசிலடிக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் ராஜேஸ்வரி கொட்டாயில் முன்பக்கத்துத் தரை டிக்கட்டில் மண்ணை கும்பாரமாகக் குவித்து அமர்ந்துகொண்டு சினிமாப் படத்தின் நடுவே விசிலடிக்க,
பின்பக்கத்து கூடைச்சேர் டிக்கெட்டிலிருந்து நான்கைந்துபேர் கத்தினார்கள்.

'டேய் யார்ரா அவன் பிகிலடிக்கறது ?.. '

பயந்து மூச்சுக்காட்டாமல் ஒளிந்துகொண்டாலும் மனதுக்குள் பெருமையாக இருந்தது.

அன்று தெருவே பரபரப்பாக இருந்தது. எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் வீட்டுப் பக்கம் வந்த அப்சரைப் பார்த்துக் கேட்டேன்.

'க்யா ரே ?... '

'ரவி நம்ம மிட்டாதார் மகன் இருந்தாரில்லே ?.. '

'ஆமா. '

'அவருக்கு ஆகஸ்லண்ட் ஆயி சத்திபோய்ட்டாராம் ?! '

அவர் வாழும் சந்தின் முனை வரை சென்று பார்த்தேன். அவருடைய நீண்ட கதறல் ஒலி கேட்டது. அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. அது இதுநாள் வரை அவர் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளின் பீறிடலாக இருந்தது.

'அல்லா, என்னைக் கொன்னிருக்கக் கூடாதா ?... '

வரலாற்றுப் பாடத்தில் படித்த முகலாய மன்னருடைய நினைவு வந்தது. சாகக்கிடந்த தன் மகனைக் காப்பாற்ற உண்ணாமல் உறங்காமல் மூன்று நாள் தொடர்ந்து தொழுது தன் மகனை காப்பாற்றி தான் உயிர்விட்ட முதிய மன்னனின் கதை.

பிறகு, மீண்டும் மேட்டுத்தெருவுக்கே குடிபெயர்ந்துவிட்டோம். நான் மேல் படிப்புக்காகப் பட்டணம் நோக்கிப் போய்விட விடுமுறைகளில் மட்டுமே ஊருக்கு வருவது வழக்கமாகிப் போனது.

ஒருநாள் கல்லூரித் தேர்வுகள் முடிந்து நன்றாக மழை பெய்து ஓய்ந்த ஒரு இரவில் பேரூந்தை விட்டு இறங்கினேன்.

'ரவி வாடா நல்லாக்குறயா ? ' அன்வர் வெகு உற்சாகமாக வரவேற்றான்.
சைக்கிளின் பின் கேரியரில் கட்டிவைத்த ஆட்டுத் தோலுடன் நின்றிருந்தான்.

'என்னடா அன்வர், தோல் வியாபாரமா ? '

'அட நீ வேறபா, சந்தைக்கு போயிருந்தனா, மாமு இத தலைல கட்டிட்டாரு. அவரு ஊட்ல கொண்டுபோய் கொடுக்கணும். நான் ஒரு மளிகைக் கடை வச்சிருக்கன். '

பள்ளி நண்பர்கள், நெருங்கிய பலர் மற்றும் மலரும் நினைவுகள் அனைத்தையும் நிதானமாகத் துவைத்துக் காயப் போட்டபின்
கடைசியாகக் கேட்டேன்.

'மிட்டாதார் எப்படியிருக்காரு ?.. '

'உனுக்கு தெரியாதா ? அட.. நீதான் ஊருலயே இருக்கறதில்லையே. அவரு இறந்துபோய் ரொம்பநாள் ஆச்சிபா. சரி நான் வரம்பா. ரொம்ப நேரம் ஆயிடுச்சி. நெறய வேல இருக்குது. '

ஈரமான சாலையில் நடந்து, மக்களோடு கலக்கப் பிடிக்காமல் இடதுபுற கொடித்தடத்தில் தனியாக நடந்தேன். நடந்தபடியே மேலே பார்த்தபோது மழை விட்ட வானத்தில், அடையாக அப்பியிருந்த கருப்பு இருளில், தோன்றியிருந்த ஏராளமான நட்சத்திரத் துளைகளின் வழியே வானம் என்னை வெறித்துக் கொண்டிருந்தது. என்னுள் வெகு தன்னியல்பாய் மீண்டும் அந்த கேள்வி எழும்பியது.

'மிட்டாதார் நட்சத்திரமாயிருப்பாரா ?... '

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

கவிதை - கடமை



கவிதை எழுதுதல் கால விரயம்
என்று உலகம் கூற, 



கவிதை எழுதாது வீணான
நாட்களில்,

கல்லாது வீணான காலங்கள்...

எழுதப்படாது வீணான
நாட்குறிப்பு.

மீட்டப்படாத வீணையில்
துயின்று கிடந்த ராகங்கள்...

அலைகிளம்பாது
அடங்கிக் கிடந்த மஹா சமுத்திரங்கள்...

நடைபயிலாது
முடங்கிக் கிடந்த குழந்தைகள்...

அடைமழையோ என்று
இடியோடு பொழியாத மேகங்கள்...

காணாது மறந்துபோன
ஒருகோடி விண்மீன்களின்
கண்சிமிட்டல்கள்...

ஒளிவிழாது இருண்டு கிடந்த
உலகத்தின் பாதி...

சந்திர அப்பங்களைத்
தின்ன மறந்துபோன
பல நூறு இரவுகள்...

மறந்து மரத்துப் போன
எமது மூதாதையர் சரித்திரம்...

ஒப்புக் கொள்ள மறந்து மறுக்கப்பட்ட
எமது உள்ளத்து உள்ளொளி.

அண்ட முகடுகளை உரசிப்பார்க்க
மறந்துபோன உள்ளம். 


உயிரோடு இருக்கிறேன்
என்பதை
ஒப்புக் கொள்ள மறுத்த மனம். 


சி.என்.ஜி

'எலக்ட்ரிக் க்ரிமடோரியம் '

என்ற பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. பெயர்ப் பலகைதான் மின்சாரச் சுடுகாடு

என்று சொன்னதே ஒழிய, உள்ளே தென்பட்டதென்னமோ இந்திரப்ரஸ்தா கேஸ்
லிமிட்டடின் எரிவாயு பம்ப்.

அவன் பேரூந்து சராய் காலேக்ஹானில் நின்றுகொண்டிருந்தது. பேரூந்து

நிறுத்தத்திலிருந்து சற்று தள்ளி. சன்னல் வழியாக அவனுக்குத்

தெரிந்ததெல்லாம் இந்த பெயர்ப்பலகை, கேஸ் பம்ப், பின்னால் தென்பட்ட ஒரு

பொட்டல் வெளி அதன் பின்னணியின் மடிப்பில் தெரிந்த 'அந்த்த

ராஷ்ட்ரீய.. ' என்று மக்களால் உச்சரிக்கப்படும் அனைத்து மாநில பேரூந்து

நிலையம். அதற்கும் பின்னே மங்கலான கோடாகத் தெரிந்த ஹஜ்ரத்

நிஜாமுதீன் ரயில் நிலையம். பின்புலத்தில் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில்

அரிதாகத் தலைகாட்டிய சில கோதுமைப் பயிர்கள்.

'சே என்னாச்சு இந்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்! கண்ட இடத்தில் நிறுத்தி

உயிரை வாங்கித் தொலைக்கிறார்கள். '

நடத்துனர் கீழே யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருந்தான். வண்டை

வண்டையாகக் கெட்ட வார்த்தைகளோடு, 'சாலா ' என்பது மட்டும் தெளிவாகக்

காதில் விழுந்தது.

'என்னதான் நடக்கிறது இங்கே ? '

பொறுமையில்லாமல் நாலு அடி நடந்து முன்பக்கக் கண்ணாடி வழியாக

எட்டிப்பார்க்க, சற்று தொலைவில் ஓட்டுனர், இரண்டு மூன்று

போலீஸ்காரர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

'சரிதான், ஆரம்பிச்சிட்டாங்களா ? எப்படியும் கால் மணிநேரத்திற்கு

குறைஞ்சு இங்கிருந்து நகர முடியாது. '

பேரூந்திலிருந்த மக்களிலும் பாதிப் பேர் குப்பல் குப்பலாக மேலும் கீழுமாக

அலைந்து கொண்டிருந்தார்கள். மெது மெதுவே நடத்துனரைச் சுற்றிக் கூட்டம் 

கூடத் தொடங்கியது.

'ஏன் இப்படிப் பண்றாங்க ?.. நம்ம நேரம் தானே வீணாகுது... '

ஆளாளுக்கு கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்களே ஒழிய யாருக்கும் ஓட்டுனர்

இருக்கும் இடத்திற்குச் சென்று பஞ்சாயத்து பண்ணும் தைரியம் இருந்ததாகத்

தெரியவில்லை. இனி ரோடு பர்மிட், ஆர்.ஸி, ட்ரைவிங் லைசன்ஸ் இன்ன

பிற இத்யாதி இத்யாதி என வரிசையாக மண்டகப்படி நடந்தாக வேண்டுமே.


சரி எனக்கும் அப்படியொன்றும் அதிமுக்கியமான வேலை இல்லை. இன்று

விடுமுறைதான். நிதானமாக இவர்கள் கதா காலட்சேபங்களைப் பார்த்துவிட்டுச்

செல்லலாம்தான், ஆனால் அநியாயத்திற்கு கையில் படிப்பதற்கு புத்தகமும் 
எதுவும்

இல்லை. கையைப் பிசைந்து கொண்டு உட்கார வேண்டியதாகி விட்டது. 

எனக்குத் 
திரும்பத் திரும்ப அந்த பெயர்ப் பலகை மீதே கண்ணோட்டமாக இருந்தது.

'மின்சாரச் சுடுகாட்டுக்கும் இந்த கேஸ் பம்புக்கும் என்ன சம்பந்தம் ? ஏன் இந்த

பெயர்ப் பலகையைக் இங்கே கொண்டுவந்து நட்டார்கள் ? யார் கிட்டயாவது

கேட்போமா ? '

'ம்ஹூம்.. கேட்பதாவது, அவனவனுக்கு இருக்கிற மூடில் நாம் இந்த மாதிரி

ஏதாவது எசகு பிசகாகக் கேட்டுவைத்தால் பிறகு நாலு அப்பு அப்பாமல்

விடமாட்டான். எல்லோரும் நம்மைப் போலவே வேலையத்தவனாக

இருக்கமாட்டார்கள். '

அது தில்லிக்கு சி.என்.ஜி வந்து சேர்ந்த புதிது. எல்லோரும்

பொறுக்கமாட்டாமல் செய்தித் தாள்களைப் பார்த்து சி.என்.ஜி என்றால்

'கம்பரஸ்டு நேச்சுரல் கேஸ்(இந்தி பாணியில் கைஸ்) ' அதாவது

அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு என்று படித்துப் புரிந்து

கொண்டிருந்தார்கள். அனைத்துப் பத்திரிகைகளும் தில்லியின் சி.என்.ஜிக்

கதையை தினந்தோரும் பத்தி பத்தியாக எழுதிக் கொண்டிருந்தன. ஒரு

பதினைந்து அல்லது பதினெட்டு வருடங்களுக்கு முன்னே, ஒரு உச்ச நீதிமன்ற

வழக்கறிஞர் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வெறுத்துப் போய் உச்ச நீதிமன்றத்தை

அணுகி, விடாக்கண்டனாகப் போராட, உச்சநீதிமன்றம் தன்

கேள்விகளுக்கெல்லாம் தில்லி அரசு சொன்ன சால்ஜாப்புகளால் திருப்தி

அடையாமல் தடாலடியாகப் போட்ட உத்தரவு இன்று இந்த மூன்றெழுத்தை

தில்லியின் கதாநாயகனாக அல்லது நாயகியாக ஆக்கிவிட்டது.

பத்திரிகைகளும் தொல்லைக்காட்சிகளும் இவ்வளவு சுற்றுச்சூழல் மாசு குறைந்தது

என்று கொட்டை எழுத்தில் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.

ஆனால் ஓடத் தகுதியில்லாத பேரூந்துகளையே பெரிதும் நம்பிப் பிழைப்பை

நடத்திவந்த அரசுப் பேரூந்து நிறுவனம், தன்னுடைய முக்கால் பங்கான சில

ஆயிரம் பேரூந்துகளை ஓரங்கட்டிவிட, என்னை மாதிரிப் பேரூந்துகளை நம்பிப்

பிழைத்துக் கொண்டிருந்தவர்களைப் பிடித்தது சனி. சில சமயம் பேரூந்துக்காக

கால்கடுக்க இரண்டு மணி நேரம் கூடக் காத்திருக்க நேர்ந்தது. அந்த நேரத்தில்

தனியார்ப் பேரூந்துகள் கைகொடுத்தன. பேரூந்து முதலாளிகள்

புத்திசாலிகளாயிற்றே ? அவசர அவசரமாகத் தங்கள் உருப்படியான 
பேரூந்துகளை

சி.என்.ஜிக்கு மாற்றி ஓடவிட்டு தாங்கள் ஓடுகின்ற சாலைக்குப் புண்ணியம்

தேடிக் கொண்டார்கள். ஆனால் தனியார் பேரூந்துகளில் சிறப்பாகச்

செய்யப்பட்ட இதுபோன்ற மாமூல் சோதனைகள் அவ்வப்போது 

தொந்தரவுகளைத் தந்துகொண்டிருந்தது.

எவ்வளவோ நன்மை இருந்தாலும், சில வயிற்றில் புளியைக் கரைக்கும்

சமாச்சாரங்களும் இல்லாமலில்லை. தனியார்ப் பேரூந்து அதிபர்கள் அவசர

அவசரமாகப் பேரூந்துகளை சி.என்.ஜிக்கு மாற்றியதில் ஆங்காங்கே சில

தொழில் நுட்பக் கோளாறுகள் உருவாகியிருந்தன. சில சமயம் அங்கே இங்கே

பேரூந்துகளில் சிலிண்டர்கள் வெடிக்க அல்லது தீப்பிடிக்க, ஓரிருவர் மரணம்

ஒருசிலர் காயம் என்று பத்திரிகைகள் வெளியிட்டு பரபரப்புத் தேடிக்

கொள்ள, பேரூந்தைப் பார்க்கும் போதெல்லாம் லேசாக கிலியடித்தாலும்..

வெளியே மழுப்பலாக,

'ம்ம்கூம்.. அதெல்லாமொண்ணுமில்ல்லல... ' என்று சவுண்டு கொடுத்து 

சமாளித்துக் கொண்டார்கள்.

சுற்றுச் சூழல் அறிவும் மக்களிடம் எசகு பிசகாக வேலை செய்தது. பேரூந்தில்

எந்த மூலையிலாவது யாரேனும் பீடி பற்ற வைக்கத் தீக்குச்சியைக்

கிழித்தாலே போச்சு. ஒரே சமயத்தில் பத்து குரல் கிளம்பும்..

'பந்து கர் ப்ஹாய் ஃபட் ஜாயகி ' , யே பத்த வைக்காத பஸ் வெடிச்சுரும்,

கேஸ் வண்டி தெரியும்லா..

சும்மா உட்கார்ந்திருந்த என்னுடைய மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. 

'ஐடியல்
மைண்ட் இஸ் த ஹவுஸ் ஆப் டெவில் 'ன்னு சும்மாவா சொன்னார்கள்.

'ஒரு வேளை இது ஆபத்தான இடம்னு காட்டுறதுக்காக இத சுடுகாடுன்னு 

போட்டு வெச்சுருப்பாங்களோ ? '

'சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது. சரி இது எக்கேடோ கெட்டு

ஒழியட்டும். எது எப்படி வெடிச்சுச் சிதறினா நமக்கென்ன ? '

ஒருவழியாக வெத்து கட்டப் பஞ்சாயத்துகள் முடிந்து ஓட்டுனன் தன் சீட்டில் 

வந்து
அமர, பேரூந்து கிளம்பியது. கிளம்பி சுமார் இருபத்தைந்து அடிதான்

நகர்ந்திருக்கும். திடாரென்று டயரிலிருந்து காற்றுப் பிடுங்கி விட்டது போல்

ஒரு சத்தம். சத்தம் நொடிக்கு நொடி வலுத்துக் கொண்டே போக, வண்டியை

நிறுத்தி ஓட்டுனன் சோதிக்க ஆரம்பிக்க, அவ்வளவு நேரமாகக் கண்டதையும்

யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த என் மண்டைக்குள் மணியடித்தது. 

நெஞ்சுக்
கூட்டுக்குள் பயம் கிளம்பியது. திடாரென உரக்கக் கத்தினேன்,

'ப்ஹாக்லோ! பஸ் ஃபட்னேவாலி ஹை!!... ' ஓடுங்க.. பஸ் வெடிக்கப்
போகுது...

பேரூந்தைவிட்டுக் கீழிறங்கித் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தேன். சற்றுத்

தொலைவிலுள்ள பேரூந்து நிழற்குடையின் அடியில் போய் நின்ற பிறகு தான்

உயிரே வந்தது. மூச்சு வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த போது என்

பின்னே பேரூந்து ஜனம் முழுவதும் ஓடி வருவது தெரிந்தது. பேரூந்திலிருந்த

அக்கம்பக்கத்து கிராமத்து மக்கள் தன் மூட்டை முடிச்சுகளோடு ஓடி

வந்துகொண்டிருந்தார்கள். நிழற் குடையருகே நின்ற பலர் சாவகாசமாக பீடி

வலித்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். யார் கண்ணிலும் நேரம்

வீணாகிற எரிச்சல் தெரியவில்லை. சொல்லப் போனால் எல்லார் கண்ணிலும்

ஒரு லைவ் வெடிவிபத்தைப் பார்க்கின்ற உற்சாகம் தெரிந்தது.

'பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வெடிக்கக் காணோம்.

என்னாச்சு இந்த பஸ்ஸுக்கு ?! '

மக்கள் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க,

அதற்குள் நடத்துனர் கையாட்டிக் கூப்பிட, அனைவரும் ஒருமாதிரியாக,எச்சில்

விழுங்கியபடி கும்பலாகப் பேரூந்தை நெருங்க... கண்டக்டர்,

'என்னாச்சிப்பா உங்களுக்கு ? வண்டில ஏதோ கோளாறு. சரி செய்யப்

போனோம். அதுக்குள்ள எதுக்கு திமுதிமுன்னு ஓடினீங்க ?!... சரி சரி

ஏறுங்க! நானே ஏதோ சவாரி போயிடுமோன்னு பயந்துட்டேன். '

மக்கள் இறங்கின வேகத்திலே முண்டியடித்து ஏறத்துவங்க. நான் மெதுவாய்

நடத்துனரை நெருங்கி,

'க்யா ஹுவா ப்ஹாய் ? ' என்னாச்சிப்பா ?

'அட நீ வேறப்பா, யாரோ ஒரு பேமானி பஸ்ஸு வெடிக்கப் போவுதுன்னு

புரளி கெளப்பி வுட்டுட்டான். நான் எங்கடா இன்னிக்கு கலெக்ஷன் பார்க்க

முடியாதோன்னு பயந்தே போயிட்டேன். சரி சரி ஏறு. ஏற்கெனவே லேட்டு.. '

ஓட்டுனனுக்காய்க் குரல் கொடுத்தான்,

'அப்பே ச்சலாலே.... ' போலாம் ரைட்.